இலங்கை கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் புதிய முறை!!


இலங்கை கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் புதிய முறை!!

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், 2026 ஒக்டோபர் 29ஆம் திகதி முதல் கடவுச்சீட்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, யாழ்ப்பாணம், கண்டி, குருநாகல், வவுனியா மற்றும் மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்களில் ஒரு நாள் அவசர சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள இணையவழி முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய நடைமுறையின்படி, ஏற்கனவே கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் இணையவழியாகவே தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து, அதற்கான கட்டணத்தையும் நிகழ்நிலையில் செலுத்த முடியும்.

எனினும், ஏற்கனவே கடவுச்சீட்டு வைத்திராத, முதல் தடவையாகக் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் இணையவழி முன்பதிவு முறைமூலம் முன்பதிவைச் செய்த பின்னர், ஒதுக்கப்பட்ட நாளன்று நேரில் சென்று விண்ணப்பத்தைக் கையளித்தல் வேண்டும்.

இணையவழி முன்பதிவு செய்வது எப்படி?

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.immigration.gov.lk இற்குச் சென்று, “Book an Appointment to Obtain a Passport at a Regional Office” என்ற இணைப்பைத் தெரிவுசெய்து பதிவுகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

இந்தப் பதிவை மேற்கொள்வதற்கு முன்னர், விண்ணப்பிப்பவர்கள் தம்மைக் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் ஒரு பயனராகப் பதிவு செய்தல் அவசியமாகும்.

பதிவின்போது, செல்லுபடியாகும் கையடக்கத் தொலைபேசி இலக்கம் ஒன்றையும், விண்ணப்பிப்பவரின் தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தையும், முதற்பெயர், கடைசிப்பெயர் மற்றும் பிறந்த திகதி ஆகியவற்றையும் வழங்கிப் பதிவைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

பதிவை ஆரம்பிக்கும் போதும், பதிவு செய்த பின்னர் பயனரை உறுதிப்படுத்திக் கொள்வதற்குமாக, பதிவுசெய்த கைத்தொலைபேசிக்கு ஒரு தடவை மாத்திரம் செல்லுபடியாகும் வகையில் (OTP) குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

அந்தக் குறுஞ்செய்திக் குறியீடு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், ஏற்கனவே கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் தங்களது பழைய கடவுச்சீட்டு இலக்கத்தை வழங்கி, விண்ணப்ப விபரங்களை உறுதிப்படுத்திய பின்னர் தமது நிகழ்நிலை விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யலாம்.

புதிதாக விண்ணப்பிப்பவர்கள் தமது விபரங்களைச் சமர்ப்பித்த பின்னர், விண்ணப்பத்தைக் கையளிக்கச் செல்வதற்கான நாள் மற்றும் நேரத்தைத் தெரிவுசெய்து முன்பதிவைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

முன்பதிவின்போது கவனிக்க வேண்டியவை

முன்பதிவின்போது, தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கம் அல்லது கடவுச்சீட்டு இலக்கம், செல்லுபடியாகும் கையடக்கத் தொலைபேசி இலக்கம் ஆகியவற்றுடன், அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையமொன்றில் கடவுச்சீட்டுப் புகைப்படம் எடுத்த பின்னர் வழங்கப்பட்ட புகைப்படப் பற்றுச்சீட்டு (Photo Studio Receipt) ஆகியவற்றைக் கைவசம் வைத்திருக்க வேண்டும்.

முறையாக முன்பதிவு நடைமுறைகளைப் பின்பற்றி, வெற்றிகரமாக நிறைவடைந்ததும், முன்பதிவு செய்யப்பட்ட திகதி, நேரம் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட பிராந்திய அலுவலகம் தொடர்பான தகவல்கள் பதிவு செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட கைத்தொலைபேசிக்குக் குறுஞ்செய்தி (SMS) மூலம் அனுப்பப்படும்.

தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ், பதவிநிலையை உறுதிப்படுத்தும் வகையிலான சேவைச் சான்றிதழ் ஆகியவற்றின் மூலப்பிரதிகளையும், விண்ணப்பத்திற்குத் தேவையான ஏனைய ஆவணங்களின் மூலப்பிரதிகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.

முன்பதிவு செய்யப்பட்ட தினத்தில் நண்பகல் 12.00 மணிக்கு முன்னதாகத் தெரிவுசெய்யப்பட்ட பிராந்திய அலுவலகத்திற்குச் சென்று விண்ணப்பத்தையும் தேவையான அனைத்து மூல ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

முன்பதிவு செய்த தினத்தில் செல்லத் தவறினால், முன்பதிவு இரத்துச் செய்யப்படும். மீண்டும் புதிய முன்பதிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

முன்பதிவின்றி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது!

முன்பதிவு இல்லாத விண்ணப்பதாரர்களிடமிருந்து பிராந்திய அலுவலகங்களில் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

பத்தரமுல்லை தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளச் செல்வோர் முன்கூட்டிய இணையவழி முன்பதிவை மேற்கொள்ளத் தேவையில்லை.

அங்கு வேலை நாட்களில் காலை 7.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

அவசரத் தேவையுடையோர், பிராந்திய அலுவலகங்களில் கிடைக்கும் முன்பதிவு திகதிகள் மற்றும் நேரங்கள் அவசரத் தேவைக்குப் பொருந்தாவிட்டால், இணையவழி முன்பதிவின்றி தலைமை அலுவலகத்திற்குச் செல்லலாம்.

ஒரே முன்பதிவின் கீழ் ஐந்து குடும்ப உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம்

ஒரே முன்பதிவின் கீழ் அதிகபட்சம் ஐந்து குடும்ப உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் அதிகபட்சம் இரண்டு பெரியவர்களும் மூன்று பிள்ளைகளும் உள்ளடங்குவர்.

விண்ணப்பதாரர், வாழ்க்கைத்துணை மற்றும் பிள்ளைகள் ஆகிய நேரடி உறவுமுறைக் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்த வசதி பொருந்தும்.

நேரடி உறவுமுறைக் குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவர்களை உள்ளடக்கிய குழு விண்ணப்பங்களுக்கு அனுமதிச் சீட்டு (Token) வழங்கப்படமாட்டாது.

16 வயதுக்குக் குறைந்த பிள்ளைகள்

பிள்ளையைப் பதிவு செய்யும்போது தாய் அல்லது தந்தையின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை வழங்க வேண்டும்.

கடவுச்சீட்டுக்கான இரண்டு சேவை வகைகள்

இணையவழி விண்ணப்ப முறைமையின் கீழ் இரண்டு சேவை வகைகள் நடைமுறையில் இருக்கும்.

1. அவசர சேவை (Urgent Service)

உரிய கட்டணத்தைச் செலுத்திய பின்னர் இரண்டு நாட்களுக்குள் கைரேகைகளை வழங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.

கைரேகைகளை வழங்கிய பின்னர், மூன்று நாட்களுக்குள் விண்ணப்பதாரர் குறிப்பிட்ட முகவரிக்குக் கடவுச்சீட்டு அனுப்பப்படும்.

கடவுச்சீட்டு SL Post Courier Service (Speed Post) மூலம் அனுப்பி வைக்கப்படும்.

2. சாதாரண சேவை (Normal Service)

உரிய கட்டணத்தைச் செலுத்திய பின்னர் இரண்டு நாட்களுக்குள் கைரேகைகளை வழங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.

கைரேகைகளை வழங்கிய பின்னர், 14 முதல் 21 நாட்களுக்குள் விண்ணப்பதாரர் குறிப்பிட்ட முகவரிக்குக் கடவுச்சீட்டு அனுப்பப்படும்.

கடவுச்சீட்டு பதிவுத் தபால் (Registered Post) மூலம் அனுப்பி வைக்கப்படும்.

🎓 கல்வி வகுப்புகள் மற்றும் பாடநெறிகள், 📚 டிப்ளோமா மற்றும் பட்டப்படிப்புகள், 💼 அரச மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்புகள், 🏆 புலமைப்பரிசில்கள் மற்றும் கல்வி வாய்ப்புகள், 📢 அரச அறிவிப்புகள் மற்றும் முக்கிய செய்திகள், 🛍️ பொருட்கள் மற்றும் சேவைகள், 🏠 காணி மற்றும் சொத்து விற்பனை விளம்பரங்கள், 🌐 இணையவழி வியாபாரத் தகவல்கள் போன்ற பயனுள்ள தகவல்களைப் பெற்றுக்கொள்ள கீழுள்ள Link ஐ Click செய்து எமது WhatsApp குழுவில் இணையுங்கள்! 👇🔗 https://chat.whatsapp.com/DnKmjd2XGOxE7apVSURKpd?s=cl&p=a&mlu=4&ilr=4&iam=2

🙏 இந்த இணைப்பை உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஏனையவர்களுடனும் பகிர்ந்து அனைவரையும் குழுவில் இணையச் செய்யுங்கள். ✨ உங்களுக்குப் பயனுள்ள தகவல்கள் — ஒரே இடத்தில்! ✨

Post a Comment

Previous Post Next Post